ஒரு வாசகியின் கேள்வி. இவ்வளவு தொழில்கள் சொல்கிறீர்களே, எந்த தொழில் செய்தால் லாபம் என்று கேட்டுள்ளார். எந்த தொழில் செய்தால் லாபம் என நான் சொல்வதைவிட உங்களுக்குப் பிடித்த 4,5 தொழில்களுக்கான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த தொழில்கள் பலவற்றை ஒரு காகிதத்தில், என்னென்ன தொழில், அதற்கான முதலீடு எவ்வளவு,பொருள்கள் தயாரிப்பு நேரம், விற்பனை வாய்ப்பு என பட்டியல் போடுங்கள். பிறகு இதில் எவை அதிக லாபம் தரக்கூடியது, உங்களால் செய்யக் கூடியது என பார்த்து செய்தால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் ரூ.8,000/- முதல் ரூ.15,000/- வரையிலான முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம் என பார்க்கலாம்:
1. சணல் பை தயாரிப்பு: சணலை தொட்டவர்கள் சோடை போனதில்லை. இதற்கு நானே உதாரணம். உழைக்கத் தயார் என்றால் உடனே சணல் பை தயாரிப்பில் இறங்கலாம். இதற்கு ஒரு தையல் இயந்திரம் தேவை. சணல் மூலப் பொருள்கள் அனைத்தும் சென்னையில் கிடைக்கிறது. சணல் பைகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவை என்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறது. மேலும், சுற்றுலாத் தலங்கள், அரசு அலுவலகங்களில் நடைபெறும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு அதிகம் பயன்படக் கூடியது. லேடீஸ் பேக், ஆபீஸ் பேக், லஞ்ச் பேக், பர்ஸ் என விதவிதமாகத் தயார் செய்து விற்பனை செய்யலாம்.
2. லவ் பேர்ட்ஸ் விற்பனை: நாய், பூனை பிடிக்காத எத்தனையோ பேருக்கு பறவைகளை பிடிக்கும். பறவைகளைப் பராமரிப்பது சுலபம். இதற்கு வீட்டில் சிறிய அளவு இடவசதி இருந்தாலும் போதுமானது. தற்போது வித விதமான பறவைகள், வெளிநாட்டு பறவைகள் என நிறைய உள்ளன. இவற்றை வளர்க்க இரும்பு கூண்டுகள், தட்டுக்கள், உணவு வகைகள் போதுமானது. மேலும் பறவைகள் மட்டுமின்றி அதை வளர்க்க தேவைப்படும் கூண்டுகளையும் விற்பனை செய்வது நல்லது. கூடுதல் லாபமும் கிடைக்கும்.
3. சூப் கடை: சூப் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியமும், ஜீரண சக்தியையும் தூண்டக் கூடியதாகவும் உள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவராலும் விரும்பப்படுகிறது. இதற்கு ஸ்டவ், மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள் மற்றும் கப், ஸ்பூன் ஆகியவை தேவை. வீட்டில் தயாரித்து ஏதேனும் கடை, சூப்பர் மார்க்கெட் எதிரிலோ, அருகிலோ வைத்து விற்பனை செய்யலாம்.
4. ரெக்சின் பை தயாரிப்பு: பர்ஸில் ஆரம்பித்து கைப்பை, ஆபீஸ் பை, டிராவல் பேக், ஸ்கூல் பேக் என வித விதமான பைகள் தயாரிக்கலாம். இதற்கான மூலப் பொருள்கள் அனைத்தும் சென்னை பாரிமுனையில் உள்ள கடைகளில் கிடைக்கின்றன. தரமான மூலப் பொருள்களை கொண்டு தயாரிக்கும் ஸ்கூல் பேக் இரண்டு மூன்று வருடம் உழைக்கும். இதனால் வாடிக்கையாளர் அதிகம் கிடைப்பார்கள். நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும்.
5. காடை வளர்ப்பு: அசைவ பிரியர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கக் கூடியது காடை உணவு. கோழிக் கறிக்கு அடுத்து காடைக்கறி அதிகம் விரும்பப்படுகிறது. இதற்கு வீட்டில் ஓரளவு இடவசதி இருந்தால் போதுமானது. கூண்டு அமைத்து உற்பத்தி, செய்து விற்பனை செய்யலாம். இது முழுமையாக வளர 6 வாரம் ஆகும். இதில் புரதம் 21% குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால் இதற்கு கிராக்கி அதிகம். நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
6. வாடகை லைப்ரரி: வாசிப்பை நேசிப்பவர்களுக்கு ஏற்ற பிசினஸ். பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள், வார, மாத இதழ்களை வாங்கிச் சுழற்சி முறையில் வாடகைக்கு அனுப்பலாம். வீட்டிலேயே ரேக் அமைத்து இதனைச் செய்யலாம். வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பி வைப்பது நல்லது. மேலும் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கென தனித் தனியாகப் பிரித்து வைப்பது நல்லது.
7. தேனீ வளர்ப்பு: தோட்டம், தோப்பு வசதி உள்ளவர்கள் இந்தத் தொழில் செய்யலாம். தேனீ பெட்டிகள் வாங்கி வைத்துவிட்டால் போதும். பெரிய அளவிலான பராமரிப்பு பணிகள் ஏதுமில்லை. தேனீ வளர்ப்பில் கூடுதல் பலனாக "அயல் மகரந்த சேர்க்கை' நடப்பதால் விவசாய உற்பத்தியும் அதிகரிக்கும். ஒரு தேனீப் பெட்டியிலிருந்து ஆண்டுக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேனுக்கு குறைந்தபட்சம் ரூ.300/- விலை கிடைக்கும். நேரிடையாகவும் கடைகள் மூலமாகவும் விற்கலாம்.
8. பாலீஷ் மாப்: கண்ணைப் பறிக்கிற பளபளப்புடன், சமையல் அறையை அலங்கரிக்கிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் பளபளப்பு ரகசியம் தெரியுமா? அலுமினியம் மாதிரி காட்சியளிக்கிற அவை,பல கட்ட பாலிஷுக்கு பிறகே மின்னும் பளபளப்பை பெறுகின்றன பாத்திரங்களுக்கு பளபளப்பு கூட்டும் பாலீஷ் போடும் மிஷினில் உபயோகிக்க பிரத்யேக மாப் அவசியம். இதை வீட்டிலிருந்தபடியே தயாரித்து விற்பனை செய்யலாம்.
9. அட்சதை பை: தாம்பூல பை தயாரிப்பு: இதை மட்டுமே தனித் தொழிலாகச் செய்யலாம். இதற்கு பேக் தைக்கும் தையல் மிஷின் இருந்தால் போதும். திருமணம், பிறந்தநாள். 60-ஆவது கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு அனைவரும் அளிப்பது இது. இதனை அவரால் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு தயாரித்துக் கொடுக்கலாம். இதுவும் நல்ல லாபம் அளிக்கக் கூடிய தொழிலாகும்.
10. நகைப் பெட்டி, அட்டைப் பெட்டி செய்தல்: நகைக் கடைகளில் மோதிரம், கம்மல் முதல் பெரிய நெக்லஸ், ஆரம் போன்றவைகளை வைப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதற்கும் அதிகம் பயன்படுத்தக் கூடியது நகைப் பெட்டி, இவற்றை வீட்டிலிருந்தபடியே கூட்டாகச் செய்யலாம். அந்தந்த நகைக் கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம். பரிசுப் பொருள்கள் வைப்பதற்குத் தேவையான அட்டைப் பெட்டிகளையும் தயாரித்து ஆர்டரின் பேரில் விற்பனை செய்யலாம்.
-உமாராஜ், (சுகா தொண்டு நிறுவனத் தலைவி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.